நாளை (05) முதல் புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாகவுள்ள நிலையில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதிகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
இன்று (04) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய,
- தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 21 ஆம் திகதியும்,
- தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 29 ஆம் திகதியும்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு
புதிய கல்விச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு சமாந்தரமாக, புதிய முறைக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துவதற்கான விசேட திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இது குறித்து பெற்றோர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலான அறிமுக வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடத் தெரிவுகளுக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் பூர்த்தி
புதிய பாடத்திட்டத்தை வகுப்பறையில் நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதன் புள்ளிவிபரங்கள் வருமாறு:
- இதுவரை 7,181 பயிற்சியாளர்கள் மூலம் 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
- புதிய பாடத் தொகுதிகளுடன் (Modules) தொடர்புடைய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கு பயிற்சிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த புதிய சீர்திருத்தங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பாடசாலைகளுக்கு வழங்குவது குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.






