இலங்கை பரீட்சைத் திணைக்களம் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பரீட்சை 2026 ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் சமர்ப்பித்தல்
- பரீட்சைக்கான விண்ணப்பங்களை நிகழ்நிலை (Online) முறைமையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 ஏப்ரல் 30 ஆகும்.
- அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்களின் ஊடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியும்.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்
- விண்ணப்பதாரிகள் அரசாங்க அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் 5ஆம் தரத்தில் பயிலும் மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
- மாணவர்கள் 2017.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருத்தல் அவசியம்.
- விசேட தேவையுடைய (பார்வை/கேட்டல் குறைபாடு) மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை மற்றும் கைதடி போன்ற இடங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும்.
உதவிப்பணம் (Bursary) பெறுவதற்கான நிபந்தனைகள்
- புலமைப்பரிசில் உதவிப்பணத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் மாணவர்களின் பெற்றோரின் வருடாந்த வருமானம் ரூபா 180,000.00 அல்லது அதற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.
- “அஸ்வசும்” திட்டத்தின் கீழ் பெறப்படும் கொடுப்பனவுகள் இந்த வருமானக் கணிப்பிற்குள் உள்ளடக்கப்படமாட்டாது.
- உதவிப்பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2016.02.01 முதல் 2017.01.31 வரையான காலப்பகுதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதிபர்களுக்கான முக்கிய குறிப்புகள்
- ஒவ்வொரு மாணவருக்கும் 8 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான அடையாள எண் (Unique Identity Number) உருவாக்கப்பட வேண்டும்.
- ஆன்லைனில் தரவேற்றம் செய்த பின்னர், அதன் அச்சுப் பிரதியைப் (PDF) பெற்று மாணவர் மற்றும் பெற்றோரின் கையொப்பத்தைப் பெற்று பாடசாலையில் பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயமாகும்.
- ஏப்ரல் 30 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தரவுகளில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், தகவல்களைச் சரியாக உள்ளிடுவது அதிபரினதும் பொறுப்பாசிரியரினதும் பொறுப்பாகும்.






