மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட QR குறியீடு முறையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக, பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கோ அல்லது தொலைதூரக் கல்வி முறைகளை (Distance Learning) அறிமுகப்படுத்துவதற்கோ கல்வி அமைச்சு எந்த முடிவும் எடுக்கவில்லை.
இது குறித்து கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கையில், இதுவரை அத்தகைய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், பாடசாலைகள் தங்களது வழக்கமான செயல்பாடுகளைத் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளன.
இருப்பினும், நாட்டின் அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பதில் உள்ள சவால்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில், கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ உட்பட பல அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல் போக்கு மற்றும் அதன் காரணமாக எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியத் துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, முக்கியமான பொதுச் சேவைகள் தடையின்றி இயங்குவதை உறுதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறான ஒரு உயர் மட்டக் கூட்டம் இன்றை தினமும் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தின் போது எதிர்காலத்தில் பாடசாலைகளை எவ்வாறு நடாத்திச் செல்வது என்பது தொடர்பாக தீர்மானம் எட்டப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







