பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பெற்றோர்களுக்கு எவ்வித பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்வில் நேற்று (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமரின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கல்விச் சீர்திருத்தங்களும் வகுப்பறை மாற்றங்களும்
- புதிய பாடத்திட்டம்: 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காக புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தற்போது 6ஆம் தரத்தில் உள்ள மாணவர்களை இதில் உள்வாங்குவது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
- மாணவர் எண்ணிக்கை: ஒரு வகுப்பறையில் ஆரம்பப் பிரிவில் 25-30 மாணவர்களும், இரண்டாம் நிலைப்பிரிவில் அதிகபட்சம் 35 மாணவர்களும் மட்டுமே இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைக்குப் புறம்பாக மாணவர்களை இணைக்கக் கூடாது.
- நவீன வசதிகள்: 2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் Smart Board மற்றும் இணைய வசதிகள் வழங்கப்படும். இதற்காகப் பெற்றோரிடமிருந்து நிதி வசூலிப்பதைத் தவிர்க்குமாறு பிரதமர் கடுமையாக அறிவுறுத்தினார்.
நிதி மேலாண்மை மற்றும் அபிவிருத்தி
பாடசாலை அபிவிருத்திக்கென 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு சுகாதார வசதிகள் மற்றும் புனரமைப்புப் பணிகளைத் தரமான முறையில் முன்னெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் முறையான திட்டங்களைச் சமர்ப்பித்து, ஒதுக்கப்பட்ட நிதியைச் சரியாகப் பயன்படுத்துவதை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள்
- புதிய நியமனங்கள்: நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவடைந்ததையடுத்து, 23,000 ஆசிரியர்களை முறையாகச் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறும்.
- கடமைப் பொறுப்பேற்பு: அதிபர் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் அல்லது நியமனங்கள் வழங்கப்படும்போது, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த முனையாது, எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும்.
- சம்பளப் பிரச்சினை: அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அதிபர் சேவையின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கான விசேட அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
“அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்காகக் காத்திருக்காமல், மாணவர்களின் பிரச்சினைகளுக்குக் கோட்ட மற்றும் மாகாண மட்டத்திலேயே துரித தீர்வுகளை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்” எனவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







