மொனராகலை றோயல் கல்லூரியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளை நிறச் சேலை அணிந்து பாடசாலைக்கு வர வேண்டும் என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தத் தீர்மானமானது பெண் ஆசிரியர்களுக்குப் பெரும் அசௌகரியங்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளதாகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ஆசிரியர்களின் உடை தொடர்பாக கல்வி அமைச்சினால் ஏற்கனவே தெளிவான அறிவுறுத்தல்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நிலையில், அமைச்சின் வழிகாட்டல்களைப் புறந்தள்ளிவிட்டு பாடசாலை மட்டத்தில் இவ்வாறான ஒரு ஆடைக்கட்டுப்பாட்டைத் திணிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும், இது ஆசிரியர்களின் பணிச் சூழலைப் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே, கல்வி அதிகாரிகள் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







