போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலை காரியாலய உதவியாளர்கள் மற்றும் காவலாளிகளாக பணியாற்றிய 19 ஊழியர்களின் சேவையை இடைநிறுத்த மத்திய மாகாண பிரதம அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் நடைமுறை விதிகளுக்கு அமைய, தவறான தகவல்கள் அல்லது போலி ஆவணங்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த நியமனங்களை இரத்து செய்வதோடு, அதுவரை அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக அரசாங்கம் அல்லது மாகாண சபையினால் வழங்கப்பட்ட அனைத்து பணத்தையும் திரும்பப் பெற வேண்டும் என கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், சேவை இடைநிறுத்தப்பட்ட குறித்த ஊழியர்கள் விடயத்தில் மத்திய மாகாண சபை அவ்வாறு பணத்தை மீளப் பெற நடவடிக்கை எடுக்கவில்லை என கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய மாகாண சபையின் கணக்கீட்டு அதிகாரி, 2023.01.01 திகதிக்கு முன்னர் சேவை நிறுத்தப்பட்ட 17 ஊழியர்களுக்கு, அவர்கள் வழங்கிய சேவைக்காகவே சம்பளம் வழங்கப்பட்டதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், 2023.01.01 திகதிக்குப் பின்னர் சேவை நிறுத்தப்பட்ட இரண்டு ஊழியர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை மீளப் பெறுவது தொடர்பான விபரங்கள், மாகாண கல்விப் பணிப்பாளரிடமிருந்து கிடைத்தவுடன் கணக்காய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலிச் சான்றிதழ்கள் மூலம் பெறப்பட்ட நியமனங்கள் சட்டவிரோதமானவை என்பதால், சட்டத்திற்கு முரணாக செய்யப்பட்ட கொடுப்பனவுகளை திரும்பப் பெற வேண்டும் என கணக்காய்வு திணைக்களம் தனது பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளது. மத்திய மாகாண சபை தொடர்பான 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.







