பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி மாதத்திற்கான புதிய கொடுப்பனவு நாளை (10 ஆம் திகதி) மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்படும் இக்கொடுப்பனவு, 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகளுக்கு அமைய இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகரிப்பு விபரங்கள்:
தற்போது நடைமுறையிலுள்ள 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவு, 2026 ஜனவரி முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து தற்போது வரை இரண்டு தடவைகள் தலா 2,500 ரூபா வீதம் இக்கொடுப்பனவு திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆரம்பத்தில் 5,000 ரூபாவாக இருந்த மாதாந்த உதவித்தொகை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 10,000 ரூபாவாக இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதியளிப்பு பங்களிப்பு:
இந்த நிதியானது மஹபொல நம்பிக்கை நிதியம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) ஊடாகத் திறைசேரியினால் பின்வருமாறு பகிரப்பட்டு வழங்கப்படுகிறது:
மஹபொல நம்பிக்கை நிதியம்: 48 வீதம்
அரசாங்கம் (UGC ஊடாக): 52 வீதம்
பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி உதவிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.







