ரமழான் விடுமுறையின் பின்னர், நாட்டின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் இதன்படி திங்கள் ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரவுள்ளது.
இந்த முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் நிறைவடைந்ததும், ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை சித்திரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதலாம் தவணையின் நான்காம் கட்ட நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன
உலகளாவிய ரீதியில் நிலவும் யுத்தச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, கல்வி அமைச்சு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்குப் பொது விடுமுறை வழங்கியுள்ளதுடன், அன்றைய தினத்துக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடுகளில் இருந்தவாறே முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







