கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை துரிதமாக வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இதுவரை எவ்வித தயார்படுத்தல்களையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் பீடங்களுக்கான மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ‘பல்கலைக்கழக அனுமதி கையேடு’ (Hand Book) இதுவரை அச்சிடவோ அல்லது இணையதளத்தில் பதிவேற்றவோ தயார் செய்யப்படவில்லை.
பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து பரீட்சைத் திணைக்களம் முன்கூட்டியே அறிவித்திருந்தும், ஆணைக்குழுவின் நிர்வாகத்தில் நிலவும் கடும் மந்தகதி மற்றும் சில உயர் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாகப் பெறுபேறுகள் வெளியான மறுதினமே விண்ணப்பங்கள் கோரப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அச்சுப் பணிகளுக்கே குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும் என்பதால், இம்மாத இறுதிக்குள் கூட விண்ணப்பங்களைக் கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களின் வசதி கருதி கையேட்டை அச்சிட்டு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், அச்சிடலில் தாமதம் ஏற்படும் போது மாற்று ஏற்பாடாக இணையவழியில் (Online) பதிவிறக்கம் செய்யும் வசதியையாவது வழங்க ஆணைக்குழு தவறியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.யவழி வசதிகள் புறக்கணிப்பு?
“கையேடு தயாராக இருந்திருந்தால், பெறுபேறுகள் வெளியான உடனேயே அதனை இணையதளத்தில் பதிவேற்றி விண்ணப்பங்களை கோரியிருக்கலாம்” என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். எனினும், ஆணைக்குழுவின் இத்தகைய செயற்பாடுகள் மாணவர்களின் உயர்கல்வி ஆரம்பமாவதை மேலும் தாமதப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
(அருண செய்தித்தளத்தில் பதிவாகிய செய்தியின் தமிழாக்கம்)







