உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரம் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, மீண்டும் அறிவித்தல் வழங்கப்படும் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் இன்று (17-03-2026) வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிருபத்திலேயே இந்தத் தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறையானது அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமைகளில் மாணவர்கள் வீடுகளில் இருந்து சுயகற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அசைன்மென்ட்கள் மற்றும் பயிற்சிகளை வழங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு வரையறுக்கப்பட்ட காலமே உள்ளதால், பாடசாலை நேரத்தை விழாக்கள் அல்லது வெளிநிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் சிக்கனத்தைப் பேணும் வகையில் பின்வரும் மேலதிக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன:
- அதிக எரிபொருள் பயன்படுத்தப்படும் வாகனப் பேரணிகள் மற்றும் விழாக்களைத் தற்காலிகமாக நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களின் பங்கேற்புடன் திட்டமிடப்பட்டுள்ள அல்லது எதிர்காலத்தில் திட்டமிடப்படவுள்ள அனைத்துக் கல்விச் சுற்றுலாக்களும் (Field Trips) மீண்டும் அறிவித்தல் வரும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய இக்கட்டான சூழலில் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, நிலைமை சீரடைந்ததும் பாடசாலைகளை வழமைப் போன்று நடத்துவது குறித்த மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது







