இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரச ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொள்கைகளை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சம்பள முரண்பாடுகள் மற்றும் அரச நிதி நிர்வாகத்தில் ஏற்படும் சவால்களைக் கருத்திற் கொண்டே இந்த ஆணைக்குழுவை நிறுவத் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இதன் பிரதான நோக்கமாகும். இதன் அவசியத் தேவையைக் கருத்திற் கொண்டே 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதியினால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும், இந்த ஆணைக்குழுவை நிறுவும் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து அரச ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் தமது பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகளை வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.







