நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழி (Online) ஊடாக முன்னெடுக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, பயணங்களுக்கான எரிபொருள் பாவனையைக் குறைக்கும் முகமாக இந்த வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து நியூஸ் ஃபஸ்ட்டிற்கு (News 1st) கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் பயணங்களை மேற்கொள்வதைக் குறைத்து, கல்வியைத் தடையின்றி முன்னெடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என விளக்கமளித்தார்.
தற்போதைய நடைமுறைப்படி, எரிபொருள் சிக்கனத்திற்காகப் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் சாத்தியமான இடங்களில் ‘வீட்டிலிருந்து பணியாற்றும்’ (Work from home) முறையைப் பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் உடனடியாக முழுமையாக இணையவழிக்கு மாற்ற முடியாது என்பதால், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் சில நேரடி விரிவுரைகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் ஏனைய விரிவுரைகள் இணையவழியில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் நிலைமை மேலும் மோசமடைந்தால், கொவிட்-19 காலப்பகுதியில் பின்பற்றியதைப் போன்று மாணவர்கள் வீடுகளில் இருந்தே கற்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆணைக்குழு பரிசீலித்து வருகின்றது. அத்துடன், பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்றிணைந்து வாகனங்களைப் பகிர்ந்து பயணிப்பதன் (Vehicle pooling) மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







