பிறப்புச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு எவ்விதத் தடையும் விதிக்க முடியாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
உரிமைகள் மறுக்கப்படக்கூடாது கல்வி கற்பதற்கும், வகுப்பறையில் பயில்வதற்குமான பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளை, ஆவணங்கள் இல்லை என்பதற்காகப் பறிக்க முடியாது. இவ்வாண்டில் முதலாம் தரத்திற்குச் சேரவுள்ள அனைத்துப் பிள்ளைகளையும், அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் அல்லது இதர ஆவணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாடசாலைகளில் அனுமதிக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
“பிள்ளைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லாதது அவர்களின் பெற்றோரின் தவறு. இதற்காகப் பிள்ளைகள் தண்டிக்கப்படக் கூடாது. சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மூலம் பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுக்கும் நடைமுறைகள் நிறைவடையும் வரை, பிள்ளைகளின் கல்வியைத் தாமதப்படுத்தாது அவர்களைப் பாடசாலைகளில் சேர்க்க வேண்டும்.”
இது குறித்து அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஏற்கனவே தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தாமதத்தைத் தவிர்க்க நடவடிக்கை தற்போது கல்வி நடவடிக்கைகள் ஏற்கனவே மூன்று மாதங்கள் தாமதமாகியுள்ளன. எனவே, அந்தந்த வலயங்களில் முதலாம் தரத்திற்குத் தகுதியான அனைத்துப் பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்வதை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதன்போது வலியுறுத்தினார்.







