இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் நிரந்தர தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான முறையான கொள்கை வரைபு ஒன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் பல திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகின்ற போதிலும், அவர்களுக்கு நிலையான வருமானம் அல்லது தொழில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் மிகக் குறுகிய காலத்திலேயே விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் நிலை காணப்படுகிறது. இவ்வாறான சூழல் விளையாட்டு வீரர்களின் திறமையை தக்கவைப்பதற்கும், சர்வதேச போட்டிகளில் இலங்கை தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுவதற்கும் பாரிய தடையாக அமைந்துள்ளது.
தற்போது முப்படையினர் ஊடாக வழங்கப்படும் தொழில் வாய்ப்புகள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழுள்ள மட்டுப்படுத்தப்பட்ட பணியிடங்கள் மாத்திரம் வீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வீரர்களின் நீண்டகால தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான முறைமையொன்றின் ஊடாக அரச, அரை அரச மற்றும் வாய்ப்புக்கள் உள்ள ஏனைய சட்டரீதியான நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பொறிமுறைக்குள் திறமையான வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதுடன், சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயரை உயர்த்த அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.






