வணிகக் கல்வியின் தரமான வளர்ச்சிக்காக ஆசிரியர்களை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம் மற்றும் வளப் பரிமாற்ற மத்திய நிலையமாகப் பயன்படுத்துதல், தொழில்முறை மற்றும் மேலதிக கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதல், வரையறுக்கப்பட்ட பௌதீக மற்றும் மனித வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்துடன் பாட அறிவை இணைத்தல், கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பிராந்திய ஆற்றல்களுக்கேற்ப திறன்களை மேம்படுத்துதல் ஆகிய பன்முக நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வலய மட்டத்தில் கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, 289 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில், 2026 முதல் 2028 வரை பொதுக் கல்விக்கான முக்கிய முதலீட்டுத் திட்டமாக, வர்த்தகக் கல்வியை உயர்த்துவதற்காக 100 செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் மத்திய நிலையங்களை (Activity Based Learning Centers) நிறுவும் திட்டம் அரச முதலீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த முன்மொழிவைக் கருத்திற்கொண்டு:
- திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக, 2026 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 25 வலய மத்திய நிலையங்களை முன்னோடித் திட்டமாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கும்,
- அம்முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றத்தின் அடிப்படையில் ஏனைய வலய மத்திய நிலையங்களை நிறுவி நடைமுறைப்படுத்துவதற்கும்,
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.






