நாட்டில் நிலவும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக பாடசாலை நாட்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைத் தவணை நிறைவடையவுள்ள நிலையில், அதுவரை புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகள் நடைபெறாது என அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி வாரத்தின் ஏனைய நான்கு நாட்களிலும் கற்றல் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும்.
கடந்த காலங்களில் நிலவிய நிச்சயமற்ற தன்மையால் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட சிரமங்களைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






