கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால், 2026ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு (தரம் 2 முதல் தரம் 11 வரை, தரம் 5 மற்றும் 6 தவிர்ந்த) மாணவர்களை அனுமதிப்பதற்கான முறையான நடைமுறைகளை உள்ளடக்கிய 09/2026 இலக்கச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
2026 மார்ச் 31ஆம் திகதியிடப்பட்ட இந்த புதிய அறிவுறுத்தல், இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து கடிதங்களையும் இரத்து செய்கிறது.
வகுப்பறைக் கட்டுப்பாடுகள்
கல்வியின் தரத்தைப் பேணுவதற்காக, ஒரு வகுப்பில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர் எண்ணிக்கையை அமைச்சு நிர்ணயித்துள்ளது:
- தரம் 2 முதல் 5 வரை: ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 40 மாணவர்கள்.
- தரம் 6 முதல் 11 வரை: ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 45 மாணவர்கள்.
குறித்த ஒரு தரத்திலுள்ள சமாந்தர வகுப்புகளின் எண்ணிக்கையினால் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலம் கிடைக்கும் தொகையை விட, தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே அவை வெற்றிடங்களாகக் கருதப்படும்.
விண்ணப்பிக்கத் தகுதியான பிரிவுகள்
புதிய சுற்றுநிருபத்தின்படி, பின்வரும் ஐந்து பிரதான பிரிவுகளின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்:
- அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றம்: முந்தைய சேவை நிலையத்திலிருந்து 25 கி.மீ. இற்கும் அதிக தூரத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் பெற்று வந்த அரச/கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் (இடமாற்றம் பெற்று 3 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்).
- வெளிநாட்டிலிருந்து திரும்புதல்: பிள்ளையுடன் தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்து, மீண்டும் நாட்டிற்கு வந்து பாடசாலை ஊட்டல் பிரதேசத்தில் வசிப்பவர்களின் பிள்ளைகள்.
- வதிவிட மாற்றம்: முன்னைய வதிவிடத்திலிருந்து 50 கி.மீ. இற்கும் அதிக தூரம் இடம்பெயர்ந்து, பாடசாலைக்குரிய ஊட்டல் பிரதேசத்திற்குள் வசிப்பிடத்தை மாற்றியவர்களின் பிள்ளைகள்.
- தரம் 5 புலமைப்பரிசில் புள்ளி: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளி மட்டத்தையோ அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளையோ பெற்ற தரம் 7 முதல் 11 வரையான மாணவர்கள்.
- பணிக்குழுவினர்: பாடசாலைகள், கல்வி அமைச்சு அல்லது அரச பல்கலைக்கழகங்களில் நிரந்தர சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் பிள்ளைகள்.
தேர்வு நடைமுறை மற்றும் கால அட்டவணை
அதிபர்கள் வெற்றிடங்களை ஜனவரி 31 ஆம் திகதியளவில் கணக்கிட்டு, பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் பாடசாலை அறிவித்தல் பலகை மற்றும் இணையதளங்களில் பிரசித்தப்படுத்த வேண்டும்.
முக்கிய திகதிகள்:
- விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய காலம்: பெப்ரவரி 16 முதல் பெப்ரவரி 28 வரை.
- நேர்முகப் பரீட்சைகள்: மார்ச் 01 முதல் மார்ச் 15 வரை.
- இறுதிப் பட்டியலை அனுமதிக்காகச் சமர்ப்பித்தல்: மார்ச் 31 இற்கு முன்னர்.
விண்ணப்பங்கள் உரிய பாடசாலை அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும். வெற்றிடங்களைக் கொண்ட குறைந்தபட்சம் 05 பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.
புள்ளி வழங்கும் திட்டம்
தரம் 2-4 வரை: வசிப்பிடம் அல்லது சேவை நிலையத்திலிருந்து பாடசாலைக்குள்ள அண்மைத் தன்மை மற்றும் இடமாற்றத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் 50 புள்ளிகளுக்கு மதிப்பீடு செய்யப்படும்.
தரம் 7-11 வரை: மொத்தம் 100 புள்ளிகளுக்கு மதிப்பீடு செய்யப்படும். இதில் அடங்குவன:
- கல்வி முன்னேற்றம்: இறுதித் தவணைப் பரீட்சை சராசரி புள்ளி (அதிகபட்சம் 15 புள்ளிகள்).
- புறக்கிருத்திய செயற்பாடுகள்: விளையாட்டு, அழகியல் மற்றும் புத்தாக்கம் (அதிகபட்சம் 25 புள்ளிகள்).
- தலைமைத்துவத் திறன்கள்: மாணவத் தலைவர் அல்லது விளையாட்டுத் தலைவர் பொறுப்புகள் (அதிகபட்சம் 10 புள்ளிகள்).
போலி ஆவணங்கள் தொடர்பான எச்சரிக்கை
தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது உறுதிப்படுத்தப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மாணவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோசடி கண்டறியப்பட்டால், அவர் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளரினால் வேறு பாடசாலைக்கு மாற்றப்படுவார்.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவ மாதிரிக்கு www.moe.gov.lk என்ற இணையதளத்தைப் பார்க்கவும்







