- மிப்றாஹ் முஸ்தபா (B.A, PGDE)
- ஆசிரியர், மட்/பட்/ மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம்.
இலங்கையில் கற்கும் மாணவர்கள் அனைவரும் அதிஷ்டசாலிகள் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். எமது நாட்டில் 6 வயதில் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் ஒரு பிள்ளைக்கு தனது பல்கலைக்கழகக் கல்வியை முடிக்கும் வரை ஏராளமான வரப்பிரசாதங்கள் காணப்படுகின்றன. உலகில் இலவசக் கல்வியை தரமாகவும் தாராளமாகவும் வழங்கும் ஒரு நாடாக இலங்கை திகழ்கின்றது. வறுமை உள்ளிட்ட எந்தவொரு சமூகப் பொருளாதாரக் காரணிகளும் மாணவர்களின் கல்விக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக இலவசப் பாடநூல், இலவச சீருடை முதலான பல்வேறு விதமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு முன்னணி நாடாக எமது நாட்டை அடையாளப்படுத்தலாம். கல்வி எனும் விலைமதிப்பற்ற சொத்தை எத்தகைய பாகுபாடுமின்றி இந்நாட்டுப் பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற எமது முன்னோர்களின் அளப்பெரிய சேவையாகவே இதனை நாம் கருத வேண்டும்.
உண்மையில் ஆறு வயதில் தனது கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக பாடசாலைக்குள் கால்பதிக்கும் ஒரு பிள்ளை தனது வாழ்வின் மிகப் பெறுமதியான 13 வருடங்களை அப்பாடசாலையிலேயே கழிக்கின்றது. மாணவப் பருவம் என்பது ஒரு மனிதன் தனது வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் மிகப்பெறுமதியான ஒரு காலகட்டமாகும். இக்காலப்பகுதியில் மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியன சரியாகவும் முறையாகவும் விருத்தி செய்யப்படுவது அவசியமாகும். அவ்வாறு விருத்தி செய்யத் தவறுகின்றபோது பிற்பட்ட காலங்களில் எதிர்மறையான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கும். இன்று சமூகத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகளுடன் தொடர்புபட்டவர்களின் பின்னணியைப் ஆராய்கின்றபோது அவர்கள் தமது பாடசாலைக் காலத்தை சரியாகப் பயன்படுத்தாமல் வீணான முறையில் கழித்தவர்கள் என்ற உண்மை புலப்படுகின்றது.
அந்தவகையில் ஒரு மனிதனுக்கு வாழ்வில் ஒரேயொரு வாய்ப்பாகக் கிடைக்கப் பெறுகின்ற இந்த மாணவப் பருவத்தை ஒரு பொற்காலம் என்றும் அடையாளப்படுத்த முடியும். பொதுவாக இந்தப் பருவத்தில் மாணவர்களுக்கு எத்தகைய பொறுப்புக்களும் காணப்படுவதில்லை. கவலைகள் ஏதுமில்லாத சுதந்திரமான இப்பருவத்தைக் கவனமாகத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதன் மூலமே எதிர்காலத் தலைவர்களான இன்றைய மாணவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்ய முடியும். அவ்வாறு மாணவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்வதற்கு அவசியமான ஐந்து வழிகாட்டல்களை அடுத்து நோக்குவோம்.
- தன்னம்பிக்கையே வெற்றியின் முதற்படி. (Confidence) .
‘என்னால் முடியும்’ என்பதே அத்தனை சாதனையாளர்களினதும் தாரக மந்திரம். இந்த உலகில் ஒரு மனிதன் சாதிப்பதற்குத் தேவையான அடிப்படையான அம்சம் தன்னம்பிக்கையாகும். எத்தனை கஷ்டங்கள், பிரச்சினைகள் வாழ்வில் ஏற்பட்டாலும் தனது இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணிப்பவன் இறுதியில் வெற்றி பெறுகின்றான். அவனைத்தான் முழு உலகமும் கொண்டாடுகின்றது. தோமஸ் அல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், ஸ்டீவ் ஜொப்ஸ் போன்ற சாதனையாளர்களை இன்று வரைக்கும் உலகம் பேசுவதற்குக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும் அதன்விளைவாக அவர்கள் அடைந்து கொண்ட சாதனைகளும்தான். தோமஸ் அல்வா எடிசன் தனது முயற்சியை ஓரிரு தடவைகளோடு நிறுத்தியிருந்தால் இன்று நாம் வாழும் உலகம் ஒளியைக் கண்டிருக்காது. எனவே தன்னம்பிக்கையோடு எமது முயற்சிகளை அமைத்துக் கொண்டால் வெற்றி எம்மைத் தேடி வரும் என்பதற்கு இத்தகைய சாதனையாளர்களே சாட்சி.
மாணவர்களைப் பொறுத்தவரையில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வற்கான களம் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலிருந்தே வழங்கப்படுகின்றது. பல்வேறு வகையான போட்டி நிகழ்ச்சிகளும் கள நிகழ்வுகளும் இதற்காகவே எமது கலைத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று துரதிஷ்டவசமாக அதிகமான இளம் சந்ததியினர் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறிய சிறிய தோல்விகளுக்காக தமது உயிரையே மாய்த்துக்கொள்கின்ற நிலைமைகளைக் காணமுடிகிறது. பரீட்சைத் தோல்வி, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக விபரீதமான முடிவுகளை எடுத்து தமது வாழ்வை தொலைத்து விடும் பலரைக் காண்கிறோம். இவர்கள்தான் தன்னம்பிக்கையற்ற கோழைகள். இத்தகையவர்களை உலகம் ஒருபோதும் கண்டுகொள்ளாது. வீழ்ந்த இடத்திலிருந்தே தன்னம்பிக்கையோடு எழுந்து சாதித்துக் காட்டும் உண்மையான ஹீரோக்களைத்தான் உலகம் பதிவு செய்யும். அத்தகைய தன்னம்பிக்கை கொண்ட நிஜ ஹீரோக்களாக நீங்களும் சாதித்துக் காட்டுங்கள்.
- இலக்குகளை அமைத்துக்கொள்ளுங்கள். (Goal Setting).
மாணவர்கள் தமது வாழ்வின் இலக்குகளைத் தீர்மானித்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஓர் அம்சமாகும். இலக்குகளை அமைத்துக்கொள்ளாத மனிதர்கள்தான் தமது நேர காலங்களை வீணாக்குபவர்களாகவும் தோல்வியை நோக்கிப் பயணிப்பவர்களாகவும் இருப்பார்கள். நடுக்கடலிலே திசை தெரியாமல் திணறி நிற்கும் கப்பலுக்கு ஒப்பானவர்களே இத்தகைய இலக்கில்லாத மனிதர்கள். எனவே மாணவப் பருவத்திலேயே தமது இலக்குகளை தீர்மானித்துக் கொள்வது வெற்றிகரமான எதிர்காலத்திற்கான அடிப்படையாகும்.
ஒவ்வொரு மாணவனுக்கும் வெவ்வேறு விதமான திறமைகள் காணப்படும். எல்லா மாணவர்களும் எல்லாத் திறமைகளும் கொண்டவர்கள் அல்லர். அந்தவகையில் மாணவர்கள் தங்களுக்குள் இருக்கின்ற திறமைகள் மற்றும் ஆற்றல்களை இனங்கண்டு கொள்வது மிக முக்கியமானது. மொழி ஆற்றல், கலைத் திறன், புத்தாக்கத் திறன், விளையாட்டுத் திறன், தொழில்நுட்பத் திறன் என வித்தியாசமான ஆற்றல்கள் மாணவர்களிடம் காணப்பட முடியும். மாணவர்களின் இத்தகைய ஆற்றல்களை இனங்கண்டு அடையாளப்படுத்துவதற்கான பிரதான களமாக பாடசாலை காணப்படுகின்றது.
பாடசாலைக் காலத்தில் மாணவர்கள் தமது ஆற்றல்கள் மற்றும் திறமைகளை அடையாளங்கண்டு அதனடிப்படையில் இலக்குகளை அமைத்துக் கொள்வது அவசியமாகும். வாழ்வில் இலக்குகளைக் கொண்ட மனிதர்கள் அவற்றை அடைந்து கொள்ளும் வரை ஓடிக்கொண்டிருப்பார்கள். இலக்குகள்தான் எம்மை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும். உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான அப்துல் கலாமின் பின்வரும் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. “கனவு காணுங்கள்! கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பதல்ல. உங்களைத் தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுதான் கனவு”.
- சரியாகத் திட்டமிடுங்கள். (Planning).
‘திட்டமிடத் தவறுபவன் தோல்வியடையத் திட்டமிடுகிறான்’ என்பது பிரபலமான ஒரு கருத்தாகும். வாழ்க்கையில் சாதித்த சாதனையாளர்களின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் திட்டமிடல் எனும் அற்புதமான அம்சம் மறைந்திருப்பதைக் காண முடியும். எத்தகைய திட்டமிடலும் இல்லாமல் வாழுகின்ற ஒரு மனிதனுக்கு வாழ்க்கை கசப்பான அனுபவங்களையே கொடுக்கும்.
மாணவர்களைப் பொறுத்தவரை பாடசாலைக் காலமென்பது அவர்களது பொற்காலம் என்று சொல்லலாம். அது எந்தவிதமான பொறுப்புக்களுமற்ற சுதந்திரமான பருவம். அவர்களின் மிகப்பெரும் பலமே நேரம்தான். இந்த உலகில் ஒரு மனிதனிடம் காணப்படக்கூடிய விலைமதிப்பற்ற சொத்தாக நேரத்தை அடையாளப்படுத்தலாம். ஏனெனில் தான் இழந்த ஒரு செக்கனைக்கூட மீண்டும் அவனால் பெற்றுக் கொள்ள முடியாது. அத்தகையதொரு பொக்கிஷத்தைத்தான் எம்மில் பெரும்பாலானோர் வீணாக்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்களது பொன்னான நேரங்களை மிகக் கவனமாகத் திட்டமிட்டு செலவிடுவதே வெற்றிக்கான அடிப்படை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்ள்.
அதேபோன்று உங்களது அன்றாட செயற்பாடுகளையும் திறம்படத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் வகுத்துக் கொண்ட இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அவசியமான செயற்பாடுகளை முதலில் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும். எமது இலக்கை அடைந்து கொள்வதில் எமது ஆரோக்கியம் பெரும் பங்காற்றுகின்றது. எனவே எமது உணவுப் பழக்க வழக்கங்களை இளம் பருவத்திலிருந்தே முறையாகத் திட்டமிடுவது அவசியமாகும். அவ்வாறே உங்களுடைய ஓய்வு நேரங்களையும் கவனமாகத் திட்டமிடுவது முக்கியமானது. உங்கள் இலக்குகளை அடைந்து கொள்ளத் துணை புரியும் செயற்பாடுகளில் ஈடுபடுவது பயன்மிக்கது. வாசிப்பு மற்றும் விளையாட்டு போன்ற பிரயோசனமான செயற்பாடுகள் மூலமாகவும் உங்களது ஓய்வு நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
- கடின முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள். (Hard Work).
நாம் எதிர்பார்க்கும் வெற்றிகள் ஒரே இரவில் கிடைத்து விடாது என்ற யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்வது அவசியம். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த உலகில் சாதித்த அத்தனை சாதனையாளர்களின் வெற்றிகளுக்குப் பின்னாலும் கடினமான முயற்சிகள் மறைந்திருக்கின்றன. பல தோல்விகளை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். தோல்விகளால் அவர்கள் துவண்டு விடவில்லை. அந்தத் தோல்விகளிலிருந்து அவர்கள் பெற்றுக் கொண்ட பாடங்களும் அவர்களது கடின முயற்சிகளும்தான் மகத்தான அவர்களின் வெற்றிகளுக்கு வழிகோலின.
உலகின் முன்னணிக் கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் அவருடைய வெற்றிக்கான ரகசியங்கள் குறித்து கேட்கப்பட்ட போது, ‘உழைக்காமல் வெறும் திறமையை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்துவிட முடியாது’ என்று அவர் கூறிய பதில் முக்கியமானதொரு செய்தியை எமக்குச் சொல்கிறது. அதேபோன்று இன்று தொழில்நுட்ப உலகின் முன்னோடியாகக் கருதப்படுகின்ற அப்பிள் நிறுவனத்தின் முன்னோடியான ஸ்டீவ் ஜொப்ஸின் அபாரமான கண்டுபிடிப்புக்களின் இரகசியமே அவரது கடின உழைப்புத்தான். ‘ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு’ என்பதே மின்குமிழ் உள்ளிட்ட சுமார் 1300 கண்டுபிடிப்புக்களை இந்த உலகுக்குத் தந்த தோமஸ் அல்வா எடிசனின் தாரக மந்திரமாக இருந்தது. அதுமாத்திரமின்றி இன்று மனிதன் பல்லாயிரக் கணக்கான மைல்களை ஒரு சில மணி நேரங்களுக்குள் கடந்து விடுகின்ற ஆற்றலுக்குப் பின்னால் இருப்பதும் ரைட் சகோதரர்கள் எனும் சாதனையாளர்களின் அபாரமான முயற்சிகள் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
மாணவர்களே! வெற்றி என்பது மிக இலகுவாகக் கிடைக்கக் கூடியது என்று நம்பி விடாதீர்கள். அந்த வெற்றிக்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நிறைய தியாகங்களை செய்ய வேண்டும். நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இலக்கை நோக்கிய உங்கள் பயணத்தில் தோல்விகளையும் சவால்களையும் கண்டு ஒதுங்கி விடாதீர்கள். நம்பிக்கையோடு முன் செல்லுங்கள். கடினமாக முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் சானையாளர்கள்தான்.
- போட்டி போட்டுக்கொண்டே இருங்கள். (Competitive Mindset).
ஒருவரின் ஆளுமையை வளர்ப்பதில் போட்டிபோடும் மனநிலை (Competitive mindset) பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. போட்டிகள் வெற்றியின் போது அடக்கத்தையும், தோல்வியின் போது பொறுமையையும் கற்றுத்தருகின்றன. இதனால்தான் பாடசாலைகளில் மாணவர்களுக்கு மத்தியில் பல்வேறு வகையான போட்டி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக அதிகமான மாணவர்கள் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றாமல் ஒதுங்கிக் கொள்கின்ற நிலைமையையே அவதானிக்க முடிகின்றது.
போட்டி போடும் மனநிலையைக் கொண்டவர்கள் எப்போதும் சுறுசுறுப்பானவர்களாகவும் தன்னம்பிக்கையுடையோராகவும் காணப்படுவர். அவர்களது ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஆர்வமும் ஈடுபாடும் இழையோடும். வெற்றிகள் கிடைக்கின்ற போதெல்லாம் அடக்கத்தையும் பணிவையும் கடைப்பிடிப்பார்கள். கிடைத்த வெற்றியில் திளைத்திருக்காமல் அடுத்த வெற்றியைத் தனதாக்கும் முயற்சியில் இறங்கி விடுவார்கள். அதேசமயம் தோல்வியடைகின்ற போது ஒருபோதும் அவர்கள் துவண்டு போகமாட்டார்கள். தாம் அடைந்த தோல்வியிலிருந்தே வெற்றிக்கான வழிகளைத் தேடுவார்கள். மின்குமிழை கண்டுபிடிக்கும் முயற்சியில் தோமஸ் அல்வா எடிசன் 1000 தடவைகள் தோல்வியடைந்த போதிலும் அவர் அவற்றை தோல்வியாகக் கருதாமல் வெற்றிக்கான வழிகளாகவே கருதினார். தொடர்ந்து போட்டி போடக்கூடிய மனநிலைதான் அவரது சாதனைக்கு வித்திட்டது.
மாணவர்களாகிய நீங்கள் பாடசாலைக் காலத்தில் இடம்பெறும் அனைத்து வகையான போட்டிகளிலும் பங்குபற்றுங்கள். ஒன்றில் வெற்றி பெறுவீர்கள். இல்லையேல் வெற்றிக்கான வழியைப் பெறுவீர்கள். நீங்கள் பெற்றுக் கொள்ளும் வெற்றி ஒரு விடயத்தைக் கற்றுத் தந்தால் தோல்வி நூறு விடயங்களைக் கற்றுத் தரும். எனவே போட்டி போடும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். போட்டியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்மை மற்றும் நேர்மையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி உங்களைப் பின்தொடரும்.
இறுதியாக, இன்றைய மாணவர்கள்தான் இந்த நாட்டின் முதுகெலும்புகள். அவர்களே எமது அழகிய தேசத்தை வழிநடாத்த இருப்பவர்கள். பாடசாலைக் காலத்தில் வெறும் கோட்பாடுகளோடு மாத்திரம் அவர்களைச் சுருக்கி விடாமல் அவர்களது ஆளுமையை விருத்தி செய்வதன் மூலமாகவே தரம் வாய்ந்த தலைவர்களை உருவாக்க முடியும். அந்தவகையில் மேலே கூறப்பட்ட தன்னம்பிக்கை, இலக்குகளைத் தீர்மானித்தல், திட்டமிடல், கடின முயற்சி மற்றும் போட்டி போடும் மனநிலை ஆகிய ஐந்து விடயங்களிலும் மாணவர்கள் தமது பாடசாலைக் காலம் முதலே கவனம் செலுத்தும்போது நிச்சயம் அவர்கள் ஆளுமைமிக்க தலைவர்களாகவும் நற்பிரஜைகளாகவும் திகழ்வார்கள் என்பதில் எத்தகைய சந்தேகமுமில்லை.







